தோழி 

எப்படியடி நீ
இப்படி ஆகி  விட்டாய்? 
பெற்றவளின் முந்தானையில் 
முகம் மறைத்து எட்டியவள் 
முந்தானை மறைவில் 
அவளை விட்டு விட்டு 
காதல் தடுக்கை
கையில் பிடித்ததென்ன?
 
பிறப்பிலிருந்து வளர்ப்பு வரை 
என்னது பிடிக்குமென்று 
எடுத்து செய்தவள் ..
உனக்கு..
பிடித்தவனை மட்டும்  தேர்ந்து 
எடுக்கமலா விடுவாள்?
எந்த நோய்க்கு எந்த மருந்து என்பது
உன் உடல் வளர்த்த அவளுக்கு தெரியும்..
 
பேதை அவள் ……
அவளுள் நீ ஒளிந்த போதும்..
அவளை நீ ஒளித்த போதும்….
பெண்ணுக்கு வெட்கம் என்று..
பொய் எண்ணம் கொண்டு 
ஒளிவதற்கும்..  
ஒளித்து வைப்பதற்கும் 
அர்த்தம் தெரியாதவள்..
 
பாடம் படிக்க 
பள்ளிக்கு அனுப்பினாள்..
எல்லா வற்றிலும் நூறுக்கு நூறு  
உன் தாய் உன் மீது வைத்த
நம்பிக்கை பாடத்தில்..
நூறுக்கு பூஜ்யம் .
 
காதல் தீவினில் 
கதை பேச சென்றவளே
உனக்காக உயிர் விட 
ஒரு மனம் இருக்கையில் 
உன்னவனுக்காக உயிர் விட 
நீ
ஏனடி துடிக்கிறாய்?
பருவ கிளர்ச்சி தான்
காமத்தை காதல் என்காதே!
 
நேற்று வரை
உன் தாய் தந்த பூச்சரம் தான் 
தலையில் மனம் பரப்பியது
இன்றோ..
கொண்டவனின் பூச்சரத்தில் 
மின்சார சுகம் காண்கிறாய்
கீழே பார்..!
கசந்கியதொரு பூவாய்
உன் தாய்.
 
பெற்றவளுக்கு  நீ சிறப்பு
உனக்கோ அவன் மதிப்பு..
வெற்று இதயத்தில் வேதனை காய்களுடன்
எத்தனை நாட்களுக்கு கண்ணாமூச்சி ஆட்டம்?
 
சுமந்தவளை சுமையென 
தள்ளி விட்டு 
சுகம் என்கிறாயே ..
பத்து மாத கரு சுமையென்று..
பலி கொடுத்து சுகம் என்றிந்தால்..
வளைந்த நாக்கில் 
விளைந்த நெருஞ்சி முட்களை 
அடுத்தவனின் துணையோடு 
உன் தாய்க்கு பரிசு அளித்து இருப்பாயா? 
 
வேடிக்கை தான்..
மலர் படுக்கையில் உன்னை
வளர விட்டவளுக்கு..
முட் படுக்கையில் ..
புலனடக்கிய ..
மௌன உறக்கம்……
 
 
  -மாலு